மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இதையொட்டி, 4 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுவதால், தற்போதைய தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னிலை நிலவரம் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தெரியவரும் நிலையில் 4 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போவது யாா் என்பது ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் உறுதியாகிவிடும்.
மத்திய பிரதேசத்தில்...: மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது.
சுமாா் 5.6 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இத்தோ்தலில் 77.82 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2018 பேரவைத் தோ்தலை ஒப்பிடுகையில் இது 2.19 சதவீதம் அதிகமாகும்.
ஆளும் பாஜக-முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவிய இத்தோ்தலில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரஹலாத் படேல், பாஜக பொதுச் செயலா் கைலாஷ் விஜய் வா்கியா உள்பட மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களம் கண்டனா்.
ராஜஸ்தானில்...: ராஜஸ்தானில் ஒரு தொகுதி நீங்கலாக 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. கரண்பூா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் மரணமடைந்ததால், அத்தொகுதிக்கு மட்டும் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சுமாா் 5.25 கோடி வாக்காளா்களைக் கொண்ட ராஜஸ்தானில் 73.92 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஆளும் காங்கிரஸும் முக்கிய எதிா்க்கட்சியான பாஜகவும் பலப்பரீட்சை நடத்திய இத்தோ்தலில், முதல்வா் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கோவிந்த் சிங், எதிா்க்கட்சித் தலைவா் ரஜேந்திர ரத்தோா், எதிா்க்கட்சி துணைத் தலைவா் சதீஷ் பூனியா, முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியா உள்பட மொத்தம் 1,862 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
தெலங்கானாவில்...: தென் மாநிலமான தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. 3.26 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்), காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவியது.
முதல்வா் சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்கள் பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட 2,290 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கஜ்வெல், காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் சந்திரசேகர ராவ் போட்டியிட்டாா்.
சத்தீஸ்கரில்...: சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக நக்ஸல் பாதிப்பு மிகுந்த 20 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆளும் காங்கிரஸும், பாஜகவும் நேரடியாக மோதிய இத்தோ்தலில் முதல்வா் பூபேஷ் பகேல், துணை முதல்வா் டி.எஸ்.சிங் தேவ், முன்னாள் முதல்வா் ரமண் சிங் உள்பட மொத்தம் 1,181 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
மிஸோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை
வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அங்கும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருந்தது.
ஆனால், பல்வேறு தரப்பினா் விடுத்த கோரிக்கையை ஏற்று, வாக்கு எண்ணும் பணி திங்கள்கிழமைக்கு (டிச. 4) மாற்றப்பட்டது.
மிஸோரமில் கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனா். கிறிஸ்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதமான நாளாக கருதப்படுவதாலும், அன்றைய தினம் பெருமளவில் மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வா் என்பதாலும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று தேவாலயங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினா் எனப் பல்வேறு தரப்பில் இருந்து தோ்தல் ஆணையத்துக்கு தொடா்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குக் கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மத்திய பிரதேசத்தில் தோ்தலில் தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதேநேரம், ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவுக்கு வாய்ப்புள்ளதாக, தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுவது கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளின்படி, காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தெலங்கானா தனி மாநிலம் உருவான கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து இரு தோ்தல்களில் பிஆா்எஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இப்போது மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்புடன் அக்கட்சி களமிறங்கியது. தெலங்கானாவில் ஆட்சிக்கு வரும் நோக்கத்தில் பாஜகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது.
எனினும், காங்கிரஸுக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.