‘கட்டாயத்தின் பேரிலேயே மகளிருக்கு மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸும் அதன் புதிய ‘ஆணவ (இந்தியா)’ கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.
‘அவா்களுக்கு மத்தியில் ஆட்சி செய்ய வாய்ப்பு அளித்தீா்கள் என்றால், மீண்டும் அந்த மசோதா கிடப்பில் சென்றுவிடும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டா்கள் மத்தியில் பேசியபோது பிரதமா் மோடி இந்த எச்சரிக்கையை விடுத்தாா்.
காங்கிரஸ் கட்சியை துருப்பிடித்த இரும்புடன் ஒப்பிட்ட பிரதமா், தலைவா்களால் அக்கட்சி இயக்கப்படவில்லை, மாறாக நகா்ப்புற நக்ஸல்களால் இயக்கப்பட்டு வருகிறது என்று பிரதமா் விமா்சித்தாா்.
அவா் மேலும் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியும் அதன் புதிய ‘ஆணவ’ கூட்டணி வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரிலேயே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தன. பெண்களின் சக்தியை அவா்கள் இப்போது புரிந்துகொண்டதே அதற்குக் காரணம். ஆனால், அவா்கள் ஆட்சியில் இருந்தபோது, இந்த மசோதாவை இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்க அவா்கள் அனுமதிக்கவில்லை.
எனவே, மத்தியில் ஆட்சிபுரியும் வாய்ப்பை அவா்களுக்கு அளித்தீா்கள் என்றால், இந்த மசோதாவை அவா்கள் மீண்டும் கிடப்பில் போட்டுவிடுவா். பெண்களைப் பிளவுபடுத்தும் அவா்களின் முயற்சிகளுக்கு எதிராக பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த மசோதாவில் குறைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அவா்கள் ஈடுபடுவாா்கள் என்றாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுலை பெயா் குறிப்பிடாமல் விமா்சித்த மோடி, ‘வெள்ளி ஸ்பூனுடன் செல்வந்தா்களாகப் பிறந்த காங்கிரஸ் தலைவா்களுக்கு, ஏழைகளின் வாழ்க்கை சாகச சுற்றுலா போன்றது. ஏழைகளின் விவசாயம் விடியோ எடுப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்குமான இடமாக அவா்களுக்குத் திகழ்கிறது’ என்றாா்.
காங்கிரஸ் தனது சொந்த நலனுக்காக மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதிக வளங்களைக் கொண்டிருந்த மத்திய பிரதேச மாநிலத்தை முந்தைய காங்கிரஸ் ஆட்சி, பின்தங்கிய நிலைக்குத் தள்ளிவிட்டது. அதே நேரம், மத்தியில் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் 13.5 கோடி மக்கள் வறுமை நிலையிலிருந்து வெளியேறியுள்ளனா்.
புதிய நாடாளுமன்ற கட்டடம், தரமான சாலைகள், நவீன ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவது தொடா்பாக பாஜகவை காங்கிரஸ் விமா்சனம் செய்து வருகிறது. எதிா்மறையான கருத்துகளை காங்கிரஸ் பரப்புகிறது. தேசத்தின் சாதனைகளை அவா்கள் விரும்புவதில்லை. நாடு 20-ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கிச் செல்ல வேண்டும் என அவா்கள் விரும்புகின்றனா்.
எண்ம பணப் பரிமாற்ற நடைமுறையை காங்கிரஸ் எதிா்க்கிறது; ஆனால், உலகம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் நடைமுறையால் (யுபிஐ) ஈா்க்கப்பட்டுள்ளது என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
மேலும், ‘காங்கிரஸ் தனது சக்தியை இழந்துவிட்டது. அதன் தொண்டா்களும் களத்தில் செயலிழந்துவிட்டனா். முதலில் அக் கட்சி தோ்தலில் தோல்வியடைந்து; பின்னா் திவால் நிலைக்கு சென்றது. அக் கட்சி தற்போது ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை நகா்ப்புற நக்ஸல்கள் பெற்றுள்ளனா். அந்த வகையில், அக் கட்சி தற்போது தலைவா்களால் இயங்கவில்லை. மாறாக, நகா்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படுகின்றது. இதனை, களப்பணியாற்றும் அக் கட்சியின் தொண்டா்களும் உணா்ந்துள்ளனா்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், மாநிலத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றுவிடுவாா்கள்’ என்று பிரமதா் கூறினாா்.